Maalaisudar 
 
 
 
 
 
 
.
சுகங்கள் பல அருளும் ஜோதி வழிபாடு
 
.
Thursday, 04 December, 2014 05:09 PM
.

இறைவன் ஜோதி மயமானவன். எங்கும் பிரகாசமாய் - இருள் என்னும் அஞ்ஞானத்தை நீக்கி, நிறைந்திருப்பவன். விண், மண், நீர், காற்று, தீ என்னும் பஞ்ச பூதங்களிலே இறைவன் அமைந்து அருள் செய்தாலும், தீயின்வடிவமாகத் திகழும் அவன் தீவினைகளை வேரறுத்து, திகழொளியை மக்கள் உள்ளங்களில் பரப்பி, நம்மை வாழ்வாங்கு வாழச்செய்யும் பரங்கருணை படைத்தவன்.


.

அவ்வாறு நிறைந்திருக்கும் தீப ஜோதியை வணங்கினால், இறைவனின் அருளைப் பெறலாம். இல்லங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் உள்ளார்ந்த அர்த்தமும் இதுவே. ஆதி காலம் தொட்டே மக்கள் தீபவழிபாடு நடத்தி வந்தனர். திருவருட்பிரகாச வள்ளலார் இறைவனை ஜோதி வடிவாகவே வணங்கினார்.


“அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்;
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட்சாரு மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்” - என்றும்
““அருள் விளக்கே, அருட்முடரே, அருட்ஜோதி சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே” 
என்றும், போற்றிப் பரவசப்படுகிறார்.


நம் அனைவரின் உடலில் விளங்கும் ஆன்மாவானது இதயத்தில் ஒரு தீபத்தின் முடராய் கட்டை விரல் அளவில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று திருமறை கூறுகிறது.
“தஸ்ய மத்யே அக்னிய்கா அநியோர்த்வா” - என்ற வரியிலிருந்து இதனைத் தெளிவாக அறியலாம்.
திருநாவுக்கரசரோ, நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் விளக்கினைப் போன்றது என்று குறிப்பிடுகிறார். இறைவன் ஜோதிவடிவில் விளங்கும் கருணையின் பெருமை அறிந்து அவனை ஐந்தெழுத்து மந்திரத்தால் துதிக்கவேண்டும் என்கிறார்.


“இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே”
என்று புகழ்ந்து பாடுகிறார் அப்பர் பெருமான்.


நமிநந்தி அடிகளார், நற்கலியநாயனார், கணம்பில்ல நாயனார் போன்ற பெரியோர் திருவிளக்கினைத் திருக்கோயிலில் ஏற்றிவைத்து, அங்கு கூடும் பக்தர்களுக்கு ஜோதிவடிவே இறைவடிவம் என்று உணர்த்தியிருக்கிறார்கள்.
அகல், எண்ணெய், திரி, ஜோதி என்ற நான்கும் இணைந்து விளக்கு உருவாகிறது. இவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால் வழிகள் மூலம் இறைவனை அடைதலைக் குறிக்கிறது


படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலையும் இறைவன் தனது சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷ­ம், அகோரம் என்னும் ஐந்து திருமுகங்களின் மூலம் நிர்வகிக்கிறார். இவருக்கு உருவம், அருவம், அரு உருவம் என்றும் மூன்று வகை வடிவங்கள் உண்டு. இவற்றில் சிவலிங்க வடிவம் அருஉருவமாகும். தீபச்சுடரும் அவ்வாறே அருஉருவ வடிவம்தான்நடராஜ வடிவமாக சிவபெருமான் விளங்கும் போது தனது திருக்கையினில் அக்னியை ஏந்திக் காட்சி தருகிறார். இதனால் இவருக்கு அழலாடி என்ற பெயர் ஏற்பட்டது.

இத்தகு சிறப்புக்கள் கொண்டதீபத்தினை வழிபட்டால் அருணைவாழ் ஈசனை போற்றிப் பரவுவதற்குச் சமம். அனைவரும் நலமோடு வாழ அருணையாளன் அருள்புரியட்டும்.

| |

மற்றவை :